மனோ சக்தி, காந்த சக்தி

ஜூன் 21, 2007

ஊரே ரஜினி’காந்த்’ பற்றி பேசிக்கொண்டிருக்கும்போது நாமும் ‘காந்த’ சக்தி கான்செப்டை வைத்து ஒரு பதிவு போட்டுவிடலாமே என்று நினைத்ததன் விளைவு, நீங்கள் கீழே காண்பது.

ரஜினிகாந்த் பற்றி இன்று பேசுபவர்கள் பல வகை. அவருடைய காந்த சக்தியால் கவர்ந்திழுக்கப்பட்டு சிலாகித்துக் கொண்டிருப்பவர்கள் சிலர். சிலர் அவரைப் பார்த்து பொறாமைப்படுகிறார்கள், இன்னும் சிலரோ, “அவரிடம் காந்த சக்தியும் இல்லை ஒரு மன்னும் இல்லை, ஏற்கனவே முட்டாளா இருக்கிறவனை மேலும் முட்டாளாக்கி காசு பார்க்கிறார்”, என்கிறார்கள். எது எப்படியிருந்தாலும் சரி, ஒரு விஷயத்தை எல்லோரும் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். ரஜினி எதை அடையவேண்டும் என்று நினைத்தாரோ, அது பணமோ, புகழோ, ரசிகர்களின் ஆதரவோ, அதை அடைந்து வெற்றிகண்ட மனிதர்.

அது போலவே நாமும் நமக்குத் தேவையானதையெல்லாம் அடைய முடியுமா? ரஜினி அவர் துறையில் வெற்றி அடைந்தது போல் நாமும் நம் துறையில் வெற்றி அடைந்து சூப்பர் ஸ்டார் ஆக முடியுமா? கண்டிப்பாக முடியும். ஒரு காந்தம் எப்படி இரும்புத் துண்டுகளை தன்னிடம் கவர்ந்திழுக்கிறதோ, அது போலவே நாமும் நம் மனதை சக்திவாய்ந்த காந்தம் போலாக்கி நமக்கு தேவையானதையெல்லாம் கவர்ந்திழுத்து நமதாக்கிக்கொள்ளலாம்.

காந்தம் எப்படி இரும்புத் துண்டுகளை இழுக்கிறது? ஒரு சாதாரண இரும்புத்துண்டை சக்தி வாய்ந்த காந்தமாக்குவது எது? ஒரு இரும்புத்துண்டு கோடிக்கணக்கான அனு போன்ற சின்ன சின்ன பகுதிகளால் ஆனது. இந்த பகுதிகள் ஒவ்வொன்றுக்கும் வடதுருவம் தென்துருவம் உண்டு. இரும்புத்துண்டில் உள்ள இந்த அனு போன்ற பகுதிகளுடைய வடதுருவங்கள் வெவ்வேறு திசைகளை பார்த்துக்கொண்டிப்பதால் அது காந்த சக்தி இல்லாத சாதாரண இரும்புத்துண்டாகவே விளங்குகிறது. இந்த கோடிக்கணக்கான சின்ன சின்ன பகுதிகள் எல்லாவற்றின் வடதுருவங்களையும் எப்படியாவது ஒரே திசையை பார்க்கும்படி செய்தோமென்றால் அது ஒரு சக்திவாய்ந்த காந்தமாக மாறி மற்ற இரும்புத் துண்டுகளையெல்லாம் தன்னிடம் இழுத்துக்கொள்கிறது.

அதேமாதிரிதாங்க, நம்மை மாதிரி சாதாரண மனிதர்களின் மனதில் உள்ள வெவ்வேறு எண்ண அலைகள் ஒன்றோடொன்று சம்பந்தமேயில்லாமல் வெவ்வேறு விஷயங்களை நோக்கி போய்க் கொண்டிருக்கிறது. நம் மனதில் தோன்றும் எண்ணங்களையெல்லாம் ஒரே திசையில் நம் இலட்சியத்தை நோக்கி செலுத்தினோமென்றால், இரும்புத்துண்டுகள் காந்தத்தால் இழுக்கப்படுகிற மாதிரி நமக்கு வேண்டியவை எல்லாம் நம்மை நோக்கி இழுக்கப்படும்.

அதுசரி, எப்படி நம் மனதிலுள்ள எண்ணங்களையெல்லாம் ஒருநிலைப்படுத்துவது? அதற்கு முதல் படி, நமக்கு என்ன தேவை என்று நாம் சரியாக புரிந்துகொள்வது. நம்மில் பலருக்கு நமக்கு என்ன வேண்டும் என்றே சரியாக தெரியவில்லை. சிலரோ, இடைப்பட்ட இலக்குகளையே இறுதி இலட்சியமாக நினைத்துக் கொண்டுள்ளோம். உதாரணமாக, உங்களுக்கு என்ன இலட்சியம் என்று பலரைக் கேட்டால் பல்வேறு வகையான பதில்கள் வரும். வீடு வாங்குவது, கார் வாங்குவது, தொழிலில் முன்னேற்றம் அடைவது, முக்தி அடைவது, கணக்கில் சென்ட்டம் வாங்குவது, சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொள்வது, பிரைம் மினீஸ்டர் ஆவது, என்று மனிதனுக்கு மனிதன், வயதிற்கு வயது, இடத்திற்கு இடம் வேண்டியது மாறிக்கொண்டே இருக்கும். இப்படி வேண்டியது மாறினாலும் நம் எல்லோருக்குமே இருக்கும் ஒரே உண்மையான இலட்சியம் மன நிறைவு. ஆமாம், தனக்கு தேவையென்று நினைப்பது கிடைத்த உடனே மனதிற்கு ஏற்படும் நிறைவு, மன அமைதி. இதை நோக்கித்தான் நாம் எல்லோரும் ஓடிக்கொண்டிருக்கிறோம்.

உங்கள் மனதை காந்தமாக்க அடுத்த படி, உங்கள் மனதை நீங்களே இடைவிடாமல் கவனிப்பது. அதெப்படி மனசையே நாள்பூரா பாத்துக்கிட்டிருந்த மத்த வேலையெல்லாம் யார் பார்ப்பாங்கன்னு கேக்கறீங்களா? நாள் முழுவதும் மனதைப் பார்க்க முடியலேன்னாலும் குறைஞ்ச பட்சம் ஒரு நாளைக்கு அரைமணிநேரம், காலை எழுந்தவுடன் கால்மணிநேரம், இரவு படுப்பதற்கு முன் கால்மணிநேரம் ஒதுக்கலாம். அப்படி கால்மணிநேரம் டூமச்னு நெனச்சீங்கன்னா அட்லீஸ்ட் காலை அஞ்சு நமிஷம், இரவு அஞ்சு நிமிஷமாவது உங்கள் மனதுக்காக ஒதுக்குங்கள். அப்படி நேரம் ஒதுக்கி மனதை கவனிக்கும்போது உங்களுக்குள்ளே உங்களுக்கே தெரியாத பல எண்ணங்கள் உலா வருவதை நீங்க தெரிந்து கொள்ளலாம். இந்த எண்ண அலைகள் இருவகை, ஒன்று, நம் இலட்சியமான மன அமைதிக்கு வழிவகுப்பதாக அமையலாம், அல்லது மன அமைதியை குலைப்பதாக அமையலாம். பயம், பேராசை, பொறாமை, காழ்ப்புணர்ச்சி, துக்கம், இதுமாதிரியானவை எல்லாம் உங்கள் மன அமைதியை குலைக்கும், உங்களுக்கு தேவையில்லாத எண்ணங்கள். தைரியம், இரக்கம், அன்பு, அமைதி, ஆனந்தம், எல்லாம் மன அமைதிக்கு வழிவகுப்பவை. இப்படி அமைதிக்கு வழிவகுக்கும் எண்ணம் தோன்றும்போது அதற்கு ஒரு சபாஷ் சொல்லி அப்படியே விட்டுவிடுங்கள். மன அமைதிக்கு குறுக்கே நிற்கும் எண்ணம் வரும்போது, அந்த எண்ணத்திற்கு நேரெதிரான, நல்ல எண்ணத்தை மனதில் நினையுங்கள்.

உதாரணமாக, நீங்க விரோதியாக நினைக்கும் ஒருவரைப் பற்றி விரோதமான எண்ணம் வந்தால், உங்களுக்கு அன்பானவர் ஒருவரைப் பற்றி, அவர் உங்கள் காதலியோ, குழந்தையோ, தாயோ, செல்ல நாயோ, இஷ்ட தெய்வமோ, யாராகவும் இருக்கலாம், அவரைப்பற்றிய அன்பான எண்ணங்களை உங்கள் விரோதமான எண்ணத்திற்கு பதிலாக நினையுங்கள். தோல்வி பற்றிய பயம் வந்தால், உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய வெற்றியைப் பற்றி நினைத்துக்கொள்ளுங்கள். அந்த வெற்றியை அடையும்போது உங்கள் மனநிலை எப்படி இருந்ததோ அதே மனநிலையை இப்பொழுதும் கொண்டு வந்து வெற்றி பெற்ற சந்தோஷத்தில் ஒரு கணமேனும் வாழ்ந்து அனுபவியுங்கள். ஒருவர் மேல் பொறாமையான எண்ணம் வந்து அவர் தோற்க வேண்டும் என்பது போன்ற எண்ணம் வந்தால், அதுக்கு பதிலாக அவரைப் போலவே நீங்களும் உயர்ந்து வெற்றியடைவது மாதிரியான எண்ணத்தை உங்கள் மனதில் கொண்டு வாருங்கள்.

இந்த மாதிரி தினமும் இரண்டு முறை நேரம் ஒதுக்கி மனதை கவனிக்க ஆரம்பித்தால், கொஞ்ச நாளிலேயே மற்ற நேரங்களிலும் உங்கள் மனதை கொஞ்சம் கொஞ்சமாக கவனிக்க ஆரம்பித்துவிடுவீர்கள். அப்பொழுது தான் தெரியும், நாம் இவ்வளவு நாளாக உண்மையிலேயே ஒரு வித விழிப்பற்ற நிலையில தான் வாழ்ந்த வந்திருக்கிறோம் என்று. விழிப்புணர்வுடன் வாழ்ந்தோமென்றால் நம் மனதே நமக்கு உற்ற நண்பன். விழிப்புணர்வு இல்லாமல் மனதை அது போன போக்கில் விட்டால் நம் மனதை விட பெரிய எதிரி வேறு யாரும் கிடையாது.

உண்மையில் நாம் வாழ்க்கையில் செய்ய வேண்டியதெல்லாம் நம் மனதில் இருக்கும் ஒவ்வொரு எண்ணத்தையும் மன அமைதி, மன நிறைவு நோக்கி திசை திருப்பி விடுவது தான். மனதை விழிப்புணர்வுடன் கவனித்து கெட்ட எண்ணங்களையெல்லாம் களையெடுத்து நல்ல எண்ணங்களையெல்லாம் உரம் போட்டு வளர்க்கிற உழவன் வேலை தான் நாம் செய்ய வேண்டியது. இதை நாம் சரியாகச் செய்தால் மற்றவையெல்லாம் நம் மனதே பார்த்துக்கொள்ளும். நமக்கு தேவையென்று நாம் நினைப்பதை விட அதிகமாவே நமக்கு கிடைக்கும். மன நிறைவு கொடுக்கக் கூடிய விஷயங்கள் நம்மை நோக்கி, ஒரு சக்திவாய்ந்த காந்தத்தால் இழுக்கப்படும் இரும்புத்துண்டு போல, இழுக்கப்படும்.

பின்குறிப்பு 1: இரும்புத்துண்டை காந்தமாக்குவது பற்றி தெரிந்துகொள்ள பார்க்கவும்: Howstuffworks “Lodestones and Making Magnets”

பின்குறிப்பு 2: “யார்றா இவன், புதுசா வந்து அறிவுரையெல்லாம் சொல்றான், ரொம்ப தலைக்கணம் போல”, அப்படின்னெல்லாம் நெனக்காதீங்க. இதெல்லாம் எனக்கு நானே சொல்லிக்கிற விஷயங்கள். என் போலவே என் நிலையில் இருக்கும் ஜீவன்கள் யாராவது இருந்தா அவங்களுக்கும் பயன்படட்டுமேன்னுதான் பப்ளிக் பதிவா போடறேன். மத்தபடி நம்மை விட வெவரம் தெரிஞ்சவங்க இந்த உலகத்துல நிறைய பேர் இருக்காங்க. ஏதோ, எனக்கு தெரிஞ்சதை பகிர்ந்துக்கறேன். அவ்வளவுதாங்க!

Entry Filed under: சுயமுன்னேற்றம், தியானம், மனம், யோகம். .

6 Comments Add your own

  • 1. பங்காளி...  |  ஜூன் 21, 2007 at 21:08

    ஆஹா…

    பெரிய மேட்டரெல்லாம் சொல்றீங்க, வீட்ல சொல்லி சுத்திப்போட சொல்லுங்க….கண்ணு பட்ற போவுது….

    பதில்
  • 2. Friendly Fire  |  ஜூன் 22, 2007 at 15:58

    என்ன பங்காளி சார், அடிப்படை விஷயத்தையே பெரிய மேட்டர்னு சொல்லிட்டா எப்படி? எப்படியோ, மேட்டரை முழுசா(?) படிச்சு மறுமொழியும் எழுதினதுக்கு ரொம்ப நன்றி!!

    பதில்
  • 3. saravanan  |  அக்டோபர் 23, 2007 at 12:07

    friend

    you are great your sentences making me to do yoga and being calm ,helping others really you are making me a complete man
    thank you keep writing i will support you always……………………………

    good bye friend

    பதில்
  • 4. Friendly Fire  |  அக்டோபர் 24, 2007 at 9:29

    Thanks for your support my friend :)

    பதில்
  • 5. Sankar  |  ஜூன் 1, 2008 at 18:17

    Thanks a Lot My Dear Friend Simply superb

    பதில்
  • 6. subra  |  பெப்ரவரி 15, 2009 at 22:03

    very good

    பதில்

Leave a Comment

Required

Required, hidden

Some HTML allowed:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <pre> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


குறிச்சொற்கள்

Uncategorized அன்பு ஆன்மீகம் இயற்கை ஊனம் எரிபொருள் கடவுள் சாதனை சிந்தனைகள் சுயமுன்னேற்றம் சுற்றுச்சூழல் தியானம் நம்பிக்கை நாத்திகம் நித்யானந்தர் புலி பெண்கள் பொறுப்புணர்வு பௌத்தம் மதன் மதுபானம் மனசாட்சி மனம் மனிதநேயம் மனிதன் மருத்துவம் யோகம் விஞ்ஞானம் விவேகானந்தர் வீடியோ

RSS என் புதிய தளம்

RSS என் தலைமையகம்

பதிவுலகம்

Tamil resources

website metrics