Posts filed under 'ஆன்மீகம்'
கடவுள் சிரிக்கும் தருணங்கள்
கடவுள் இரண்டு வேளைகளில் சிரிக்கிறார். இரு சகோதரர்கள் தங்களுக்குள் நிலத்தை பிரித்து, குறுக்கே கயிற்றைப் பிடித்து, “இந்தப் பக்கம் என்னுடையது. அந்தப் பக்கம் உன்னுடையது” என்று சொல்லிக் கொள்ளும்போது அவர் சிரிக்கிறார். “இந்தப் பிரபஞ்சமே என்னுடையது. இதில் ஒரு துண்டு நிலத்தை வைத்துக்கொண்டு இந்தப் பக்கம் என்னுடையது, அந்தப் பக்கம் உன்னுடையது என்கிறார்களே!” என்று நினைத்துச் சிரிக்கிறார்.
கடவுள் மற்றும் ஒருமுறை சிரிக்கிறார். குழந்தையின் நோய் தீர்க்க முடியாததாக உள்ளது. தாய் அழுது கொண்டிருக்கிறாள்; வைத்தியர் அவளிடம், “அம்மா, பயப்படாதே. நான் குணப்படுத்தி விடுகிறேன்” என்று சொல்கிறார். அப்போதும் கடவுள் சிரித்துக் கொள்கிறார். குழந்தை இறக்க வேண்டும் என்பது கடவுளின் விருப்பமானால், யாராலும் அதைக் காக்க முடியாது என்பது வைத்தியருக்குத் தெரியவில்லை.
(ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள், பக்கம்: 515-516)
Add comment ஜூலை 11, 2007
பரமஹம்ச நித்யானந்தரின் சொற்பொழிவு
நேற்றிரவு youtubeல் மேய்ந்து கொண்டிருந்த போது கீழுள்ள பரமஹம்ச நித்யானந்தரின் சொற்பொழிவை காண நேர்ந்தது. அவருக்கு சிறிய வயதில் ஏற்பட்ட ஆன்மீக அனுபவம் பற்றியும் நம் வாழ்க்கைக்கு சில உபயோகமான அறிவுரைகளையும் கூறுகிறார்.
(குறிப்பு: ஆங்கில சொற்பொழிவு. கொஞ்சம் நீளமான வீடியோ, 52 நிமிடங்கள்)
நித்யானந்தர் தமக்கு ஏற்பட்டதாக கூறும் ஆன்மீக அனுபவம் கேட்க சுவாரஸ்யமாய் உள்ளது. அப்போது அவரால் தன், முன், பின், இடது, வலது, மேலே, கீழே என அனைத்து பக்கங்களில் இருப்பதையும் 360˚ பார்வையில் காணமுடிந்ததாக கூறுகிறார், மேலும், தன்னைச் சுற்றியிருந்த அனைத்து பொருட்களிலும் தன்னையே உணர்ந்ததாகவும் கூறுகிறார்.
என்னுடைய முந்தைய பதிவில் இருபரிமாண, முப்பரிமாண, நாற்பரிமாண உலகங்கள் பற்றியும், பரமஹம்ச யோகானந்தர், மற்றும் வேறு சிலரின் ஆன்மீக அனுபவங்கள் எப்படி hypothetic நாற்பரிமாண பார்வையுடன் ஒத்துப் போகிறது என்பது பற்றியும் எழுதியிருந்தேன். யோகானந்தர் முதலான அந்த பட்டியலில் பரமஹம்ச நித்யானந்தரையும் சேர்த்துக் கொள்ளலாம்.
பின்வரும் அறிவுரைகளையும் நித்யானந்தர் வீடியோவில் கூறுகிறார்.
- வாழ்க்கையில் பல சமயங்களில் சரியான முடிவை எடுக்க முடியாமல் நாம் குழப்பம் அடைகிறோம். அப்படிப்பட்ட தருணங்களில் நம் ஆன்மீக குரு ஆதே சூழ்நிலையில் எப்படி செயல்படுவார் என சிந்திக்க வேண்டும். சிறிதும் யோசிக்காமல் நாமும் அதே போல் உடனுக்குடனே செயல்பட்டு அந்த சந்தர்ப்பத்தை எதிர்கொள்ள வேண்டும்.
- பல சந்தர்ப்பங்களில், சரியான செயல்பாடு எது என நமக்குத் தெரிந்திருந்தும், பழக்கம் காரணமாகவோ, அல்லது தன்னம்பிக்கை இல்லாத காரணத்தாலோ நாம் சரியாக செயல்படுவதில்லை. ஒவ்வொரு முறையும் நாம் இவ்வாறு சரியான செயல்பாடு தெரிந்திருந்தும் செயல்படாமல் இருக்கும் போது, கர்மவினைகளில் மேலும் மேலும் அகப்பட்டுக் கொள்கிறோம். குடிப்பழக்கம், போதை, போன்ற அடிமைத்தனங்களை இதற்கு உதாரணமாக கூறலாம். போதைப் பொருள் கேடானது என்று அதைப் பயன்படுத்தும் அனைவருக்குமே தெரிந்திருக்கிறது. ஆனாலும் ஏன் அவர்களால் அந்த பழக்கத்தை விட முடியவில்லை? சரியான செயல்பாடு தெரிந்திருந்தும் தவறாக செயல்பட்டால் நம்மை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது! ஒரு விஷயத்தில் சரியான செயல்பாட்டை தீர்மானித்து விட்டவுடன் மறு யோசனை கூடாது. உடனே செயல்பட்டு அந்த விஷயத்தை முடித்துவிட்டு மறுவேலை பார்க்க வேண்டும்.
- நம் குருவை மட்டுமே நாம் எல்லா சந்தர்ப்பங்களிலும் பின்பற்ற வேண்டும். மற்ற மனிதர்கள் சமயங்களில் நமக்கு உதவலாம். ஆனால் அப்படிப்பட்ட சாதாரண மனிதர்களை நாம் எப்பொழுதும் பின்பற்றக் கூடாது. சாதாரண மனிதர்கள் நமக்கு சரியான அறிவுரைகள் வழங்கும்போது, அது அவர்களுடை அறிவுரை அல்ல, அவர்கள் மூலமாக நம் குருவே அறிவுறுத்துகிறார் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
பரமஹம்ச நித்யானந்தர் யார், அவர் செயல்பாடுகள் என்ன என்பதெல்லாம் எனக்கு அவ்வளவாக தெரியாது. அவருடைய கட்டுரைகளை முன்பு குமுதத்தில் படித்திருக்கிறேன் (இப்போதெல்லாம் படிப்பதில்லை. கடைசியாக குமுதம் படித்து ஒரு வருடத்துக்கு மேல் ஆகிறது). அவர் கூறிய அறிவுரைகளும் புதிதல்ல, நமக்கே தோன்றுபவையும் பல இடங்களிலும் ஏற்கனவே கேட்டவையும் தான். ஆனால் என் வாழ்க்கையில் சில முடிவுகளை எடுக்க யோசித்துக் கொண்டிருக்கும் இந்த தருணத்தில் நித்யானந்தரின் அறிவுரைகளை கேட்டவுடன் மனத்தெளிவு ஏற்பட்டது. “சச்சிதானந்தம் மட்டுமே அனைவருக்கும் குரு” என்று கூறியுள்ளார் ராமகிருஷ்ண பரமஹம்சர். மேலே குறிப்பிட்ட நித்யானந்திரின் மூன்றாவது அறிவுரைப்படியும் அந்த பரம்பொருளாகிய குருவே நித்யானந்தரின் மூலம் எனக்கு இத்தருணத்தில் அறிவுறுத்தியதாக நான் எடுத்துக்கொள்கிறேன். இன்றைய பதிவு மூலம் எவராவது பயனடைந்திருப்பாரானால், சச்சிதானந்தமே இப்பதிவு மூலமாக அவருக்கும் அறிவுறுத்தியதாக எடுத்துக்கொள்வாராக.
3 comments ஜூலை 7, 2007