Posts filed under 'இயற்கை'
ராத்திரி வானம் பார்க்கிற பழக்கம் உண்டா உங்களுக்கு?
சின்ன வயசிலிருந்தே ராத்திரி படுக்க போறதுக்கு முன்னாடி என்னோட பொழுதுபோக்கு, மொட்டை மாடி குட்டிச்சுவர்ல படுத்துட்டு வானத்தில இருக்கிற நட்சத்திரங்களை வேடிக்கை பார்த்து ரசிக்கிறது. நான் குழந்தையா இருந்தப்பவே எங்க அம்மா எல்லா அம்மாக்களையும் போல் நிலாவை காட்டி தான் எனக்கு சோறு ஊட்டுவாங்களாம் (இப்ப இருக்கிற அம்மாக்களெல்லாம் மெகாசீரியல் காட்டி தான் சோறு ஊட்றது…
ஹும்). அப்புறம் ஸ்கூல் போற வயசானப்புறம் சாயங்காலம் ஹோம்வொர்க் எல்லாம் முடிச்சுட்டு மாடிக்கு போயிடுவேன். மாடியில அன்னார்ந்து படுத்து வானத்தை பார்த்து இயற்கையோட பிரம்மாண்டத்தை பார்த்து ரசிக்கும்போது நம்மோட வாழ்க்கை, தினசரி டென்ஷன் எல்லாம் ரொம்ப அற்பமா தோனும். ராத்திரி வானம் பார்க்கும் இந்த நல்ல பழக்கம் இப்ப காலேஜெல்லாம் முடிச்சு வேலை பார்க்கும்போது கூட தொடர்ந்துட்டே வருது.
உங்களுக்கும் வானம் பார்த்து நட்சத்திரம், நட்சத்திர மண்டலம் (constellation) எல்லாம் identify பண்ணும் பழக்கம் இருக்கலாம். அப்படி இல்லைன்னா (இருந்தாலும் கூட) இந்த வலைத்தளத்தை போய் பாருங்க. Orion, சப்தரிஷி மண்டலம், துருவ நட்சத்திரம், இந்த மாதிரி முக்கியமா வானத்தில இருக்கற விஷயங்களெல்லாம் எப்படி கண்டுபிடிக்கிறதுன்னு ரொம்ப அழகா கத்துக் கொடுக்கிறாங்க. கத்துக்கிட்டு இன்னைக்கு ராத்திரியே உங்க வீட்டு மொட்டை மாடிக்கு போய் துருவன், சப்தரிஷிகள், இவங்களோடெல்லாம் உறவாடிட்டு வந்து படுங்க. அடுத்த நாள் காலையில எழுந்திருக்கும்போது சும்மா, புதுசா பொறந்த மாதிரி இருக்கும்!
Learn: Identify constellations, stars, planets and how to navigate at night
பின்குறிப்பு: ராத்திரி நேரத்துல வேற முக்கியமான வேலைங்களுக்கெல்லாம் நேரம் ஒதுக்கி வச்சிருக்கும் வளர்ந்த மனிதர்கள் இந்த மாதிரி சின்னப்பசங்க விஷயத்தையெல்லாம் கண்டுக்கப்படாது
12 comments ஜூலை 19, 2007
எரிபொருளாகும் மதுபானம்
ஸ்வீடன் நாட்டுக்குள் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்டு கைப்பற்றப்படும் மதுபான சரக்கு சாதாரணமாக கீழே கொட்டப்பட்டு வீணாக்கப்படும். சென்ற வருடம் இப்படி கைப்பற்றப்பட்ட 7 லட்சம் லிட்டர் (அம்மாடியோவ்!!) மதுபான வகைகளை எரிபொருளாக மாற்ற அந்நாட்டில் முடிவெடுக்கப் பட்டது. இதன்படி இந்தக் ‘குடி’ நீருடன் மிருகக் கழிவுகளையும் சேர்த்து எரித்து பயோ வாயு (bio gas) தயாரிக்கப்படுகிறது. இதன் மூலம் தயாரிக்கப்படும் எரிபொருள் மிகவும் தூய்மையானது, சுற்றுச் சூழலை மாசுபடுத்தாது. ஸ்வீடன் நாட்டின் தலைநகரான ஸ்டாக்ஹோம் நகரத்தில் ஓடும் பேருந்துகளில் இருபத்தைந்து சதவிகித பேருந்துகள் இப்படி தயாரிக்கப்டும் மாசற்ற எரிபொருளின் உதவியுடன் இயக்கப் படுகிறது. மேலும் விவரங்களுக்கு பார்க்க: Alcohol, Feces, Carcasses Fuel “Green” Vehicles in Sweden. சுற்றச் சூழலை மாசுபடுத்தம் எரிபொருள்களை அதிகமாக பயன்படுத்துவதால் புவி வெப்பம் அதிகமாகி உலகமே அழிவுகளை எதிர்நோக்கும் இந்நேரத்தில் இப்படிப்பட்ட தூய எரிபொருட்கள் தயாரிக்கப்பட்டு பயன்படுத்தப்பட வேண்டியது அவசியமாகிறது.
வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு விளைவிப்பதாக கருதப்படும் ஒரு திரவம் ‘குடி’ மக்களின் இச்சைகளை பூர்த்தி செய்வதற்கு பதிலாக இது போன்ற ஆக்கப்பூர்வமாக விஷயங்களுக்கு பயன்படுத்தப் படுவதால் உலகத்துக்கே எவ்வளவு நன்மை பாருங்கள்!
இதே போல், hemp எனப்படும் தாவரம் ஒன்றைப் பற்றிக் கேள்விப் பட்டுள்ளேன். இத்தாவரம் எரிபொருள், காகிதம், துணி, கயிறு போன்ற பல பொருட்கள் செய்வதற்கு பயன்படக் கூடியது. வேகமாக வளரக்கூடியது, மேலும் இதை வளர்ப்பதற்கு குறைந்த செலவே ஆகும். இதைப் பயன்படுத்தி காகிதம் போன்ற பொருட்களை தயாரித்தால் காடுகள் அழிவது பெருமளவில் தடுக்கப்படும். ஆனால் இதை வளர்க்க US உட்பட பல நாடுகளில் தடை உள்ளது. மனித சமுதாயத்துக்கு மிகவும் பயன் தரக்கூடிய இத்தாவரம் அதே சமுதாயத்துக்கு கேடு விளைவிக்கும் போதைப் பொருட்கள் தயாரிக்கவும் உதவுவக்கூடியது என்பது தான் காரணம். இது இயற்கையின் தவறா? அல்லது மனிதனின் சுயக் கட்டுப்பாடின்மையா?
உலகத்திலேயே மிகவுயர்ந்த இனம் என பெருமைப் பட்டுக் கொள்ளும் மனிதர்களாகிய நாம் ஒரு பொருளில் உள்ள தீமையை தவிர்த்து அப்பொருளை நன்மைக்கு மட்டுமே பயன்படுத்திக் கொள்ளும் தன்மை இல்லாதவராய் இருக்கிறோம். இயற்கையையே மிஞ்சக் கூடிய அரிய சாதனங்களை கண்டுபிடிப்பதாக மார்தட்டிக் கொண்டு இயற்கையை வெல்ல முயலும் நாம் முதலில் நம்மை நாமே வெல்ல முயல்கிறோமா? நம்முடைய தேவைகளை சரியாக புரிந்துகொள்ளும் தன்மையை வளர்த்துக் கொள்கிறோமா?
இயற்கை அன்னை நமக்கு தேவையானதெல்லாம் தேவையான அளவுக்கு வாரித்தான் வழங்குகிறாள். நாம் தான் அதை சரியாக பயன்படுத்திக் கொள்ளாமல் நம்மை நாமே அழித்துக் கொள்கிறோம். பிறகு இயற்கையையும், நாமாக கண்டுபிடித்த கடவுள்களையும் குறை சொல்லிப் புலம்புகிறோம்.
Earth provides enough to satisfy every man’s need, but not any man’s greed.
இதைச் சொன்னவர் மோகன்தாஸ் காந்தி என்ற பெயரைக் கொண்ட மாமனிதர்.
Add comment ஜூன் 27, 2007