கடவுள்?
தமிழ்மணம் விவாதக் களத்தில் கடவுள் பற்றிய சில கேள்விகளை பார்க்க நேர்ந்தது. கடவுள் பற்றி என் மரமண்டைக்கு புரிந்தவற்றை, என் நிலைப்பாடுகளை இங்கே பகிர்ந்து கொள்கிறேன். இவையெல்லாம் என் அரைகுறை அறிவின், அனுபவத்தின் வெளிப்பாடே. ஆன்மீகப் பாதையில் நான் இன்னும் வெகுதூரம் போக வேண்டியுள்ளது. இன்னும ஐந்து வருடங்கள் கழித்து இந்த பதிவைப் பார்க்கும் போது என் மனநிலை எவ்வாறு இருக்கும் என்று நினைக்கவே சுவாரஸ்யமாக உள்ளது. சரி, சொந்தக்கதை போதும். விஷயத்துக்கு போகலாம்.
கடவுள் என்றால் என்ன?
இன்றைய தேதியில் வலைப்பதிவுலகத்தை மென்பொருளாளர்கள் ஆண்டு வருவதால் அவர்கள் மொழியிலேயே விளக்குகிறேன். நாம் பயன்படுத்தும் அனைத்து மென்பொருட்களையும் இயக்குவது program எனப்படும் கட்டளைகளே. கணினி விண்டோஸில் இயங்கினாலும் லினக்ஸில் இயங்கினாலும், அதை இயக்கும் புரோகிராம்கள் ஜாவா, C, என எந்த மொழிகளில் இருந்தாலும் அடிநிலையில் இக்கட்டளைகள் பைனரி பிட்டுகளான 1 மற்றும் 0 ஆகியவற்றின் வெவ்வேறு சேர்க்கைகளாகவே விளங்குகின்றன. ஆக, எல்லா மென்பொருளுக்கும் அடிப்படை இந்த ஒன்று, மற்றும் பூஜ்யத்திலான சங்கேதக் குறிகளே. இந்த 1, 0 தான் எல்லா மென்பொருளுக்கும் அடிப்படையான பரம்பொருள். இந்த பைனரி பிட்டுகளாலான intelligence வேலை செய்ய வேண்டுமானால் அதற்குத் தேவை மின்சாரம். ஹார்டுவேர் நிலையில் பார்த்தீர்களானால் இந்த 1, 0 இரண்டுமே மின்சாரத்தின் இரு வெவ்வேறு அளவுகள் என்று அறிய முடியும் (3V என்றால் பூஜ்யம், 5V என்றால் ஒன்று). 1 மற்றும் 0 ஆல் ஆன intelligenceஉம், மின்சாரமும் சேர்வதால் நிகழ்வதே மென்பொருள் மாயாஜாலம்.
அது போலவே இந்த உலகத்தில், பிரபஞ்சத்தில் உள்ள அத்தனை பொருட்களுக்கும் உயிர்களுக்கும் அடிப்படையாக cosmic intelligence ஒன்று உள்ளது. இது ஒரு உணர்வு நிலை (pure consciousness எனலாம்). இதை சிவம் எனலாம் (சிவன் அல்ல), பரம்பொருள் எனலாம், ஆதிபகவன் என்றும் கூறலாம். சிவமும், energy ஆகிய சக்தியும் புணர்வதால் நிகழ்வதே பிரபஞ்ச விளையாட்டு. உண்மையில் சிவமும் சக்தியும் வெவ்வேறல்ல. நெருப்பையும் அதன் சுடும் குணத்தையும் எவ்வாறு பிரிக்க முடியாதோ அது போல் சிவமும் சக்தியும் ஒன்றே. நாம் அனைவரும், அனைத்துமே ஒரே பரம்பொருளின் வெவ்வேறு வடிவங்களே. பரம்பொருளிலிருந்து வந்தவர்களே நாம். முடிவில் பரம்பொருளிலேயே கலக்கிறோம். ஆதியுமில்லாமல் அந்தமுமில்லாமல் நிகழும் இந்த ஆக்கமும் அழிப்புமே பரம்பொருளின் மூச்சு.
உருவ வழிபாடு ஏன்?
தத்துவவாதிகளும் விஞ்ஞானிகளும் தான் பரம்பொருள்போன்ற அருவ பொருட்களை சிந்திக்க விரும்புகிறார்கள். கொஞ்சம் கவித்துவமும் கலையுணர்வும் நிரம்பிய மனிதர்கள் சிவத்துக்கு ஒரு வடிவம் கொடுத்து சிவனாக்கினார்கள். சிவனையும் சக்தியையும் சேர்த்து அர்த்தநாரி ஆக்கினார்கள். இந்த உருவங்களை உருவாக்கியது மனிதர்கள் தான் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் பெரியார் பாத்திரத்தில் சத்யராஜ் நடித்தாலும் நாம் திரையில் பெரியாரையே பார்க்கிறோமோ, அதுபோல் சிவனின் உருவத்தை பார்க்கும்போது சிவமாகிய பரம்பொருளையே பார்க்கின்றோம். சிவனில் மட்டுமல்ல, எல்லா மனிதர்களிலும், உயிர்களிலும், பொருட்களிலும், தத்துவங்களிலும், தன்னிலும்கூட பரம்பொருளை பார்ப்பவனே ஞானி.
அவதார புருஷர்கள்
மிருகங்களில் உடல் ரீதியில் நிகழ்ந்து வந்த பரிணாம வளர்ச்சி மனிதனில் மன ரீதியிலும், உணர்வு ரீதியிலும் நிகழத் தொடங்கியது. மனிதன் மன ரீதியில் தனக்கு மேலான குணநலன்களை வளர்த்துக் கொண்டு தனது பரிணாமத்தை வளர்த்து வருகிறான். குணநலன்களை பற்றி சிந்திக்கும் போது அந்த குணநலன்களை தாங்கிய உருவம் நம் மனதில் வருவது இயற்கையே. திடகாத்திரமான உடலைப் பற்றி நினைக்கும் போது நம் மனதில் அர்ணால்ட் ஷ்வார்ஷெநெகரோ வேறு ஒரு பாடி பில்டரோ நம் மனதில் தோன்றுவது இயற்கை. அதுபோல் தனக்கு மேலான குணநலன்களை தியானம் செய்ய மனிதனுக்கு அப்பப்போது ஒரு template தேவைப்படுகிறது. உருவமில்லாமல் வெறும் குணத்தை மட்டும் நினைத்துப் பார்க்கும் abstract thinking அனைவருக்கும் சாத்தியமில்லை.
வெள்ளையர் ஆட்சியில் அடிமைப்பட்டு கிடந்தபோது இந்தியர்களுக்கு அவர்களை உறுதியுடன் எதிர்க்கும் குணநலன்கள் நிரம்பிய template தேவைப்பட்டது. காந்தியையும் சுபாஷ்சந்திர போஸையும், மற்றோரையும் மக்கள் ஆதர்ஸமாக நினைத்து பின்பற்றினர். சாதிக் கொடுமைகளால் வாடிய சமூகத்துக்கு அதை தைரியமாக எதிர்க்கும் குணம் தேவைப்பட்டது. அதன் உருவமாக விளங்கிய பெரியார், நாரயணகுரு போன்றோரை பின்பற்றினர். இதுபோல் பல்வேறு காலகட்டத்தில் மக்களுக்கு தேவையான மிகவுயர்ந்த குணநலன்களுடன் தோன்றிய இயேசு, புத்தர், கிருஷ்ணர் போன்றோரை மக்கள் பின்பற்றி, வழிபட்டு, அவர்களை அவதாரங்கள், தேவதூதர்கள் என்று போற்றுவதில் அதிசயம் ஒன்றுமில்லை.
இந்த template மாமனிதர்களாகத்தான் இருக்க வேண்டும் என்று அவசியமில்லை கற்பனை உருவங்களாகவும் இருக்கலாம். பிரம்மச்சரியம், வலிமை, தாச பக்தி போன்றவற்றின் உருவமாக அனுமார் போற்றப்படுகிறார். நாம் எதைப் பற்றி அதிகமாக சிந்திக்கிறோமோ அதுவாகவே ஆகிறோம் என்பது மனதத்துவ ரீதியில் ஒப்புக்கொள்ளப்படும் கருத்து. அனுமான் கற்பனையா, உண்மையா என்பது முக்கியமல்ல. அவரின் குணமாகிய உடல் வலிமையை நீங்கள் உண்மையாக வழிபட்டால் நாளடைவில் உங்கள் உடலும் வலிமையடையும் என்பதில் சந்தேகமில்லை.
அற்புதங்கள் புரிபவர் தான் அவதாரமா?
பிரபஞ்ச விளையாட்டே அற்புதம் தானே. மனிதனின் அற்ப கண்டுபிடிப்புகளை அற்புதம் என்று வியக்கும் நாம், சூரியனைச் சுற்றி கோள்கள் துல்லியமாக உலா வருவதையும், இரவு வானத்தில் சந்திரனின் அழகையும் அற்புதம் என்று அவ்வளவாக போற்றாததே ஒரு அற்புதம் தானே!
மனிதன் தன்னால் விளக்க இயலாத நிகழ்வுகளை அற்புதம் என்கிறான். நூறு வருடங்களுக்கு முன்பு இது போல் ஒரு பெட்டி மூலம் மக்கள் தங்கள் கருத்துகளை பரிமாறிக் கொள்வார்கள் என்று கூறியிருந்தால் பைத்தியம் என்று பட்டம் கட்டியிருப்பார்கள். அது போல், டெலிபதி போன்ற விஷயங்களும் எதிர்காலத்தில் வெகுஜனங்களிடையே சாத்தியமாகும் என்றே நான் கருதுகிறேன். சாதாரண மக்கள் அற்புதம் என்று நினைக்கும் செயல்களை சர்வசாதாரணமாக நிகழ்த்தும் மனிதர்கள் இன்றும் கூட இருக்கத்தான் செய்கிறார்கள்.
தான் செய்யும் செயல்கள் அற்புதம் என்றும், ஏதோ இவை தனக்கே உரித்தான ஆற்றல்கள் என்றும் காட்டிக் கொள்பவர்கள் அவதாரங்கள், தேவ தூதர்கள் கிடையாது. தான் செய்யும் அசாதாராண செயல்களை மக்களின் நன்மைக்காக செய்பவர்களும், எவராலும் செய்ய முடியும் என்றும் கூறுபவர்களே அவதாரங்கள், தேவ தூதர்கள்.
சொர்க்கம், நரகம், மறுபிறவி?
மறுபிறவி பற்றிய ஆராய்ச்சிகள் அறிவியல்ரீதியாக நடந்துகொண்டுதான் இருக்கின்றன. மறுபிறவி போன்றவற்றை ஆதரித்து பல முடிவுகள் வந்துள்ளன. தனிப்பட்ட முறையில் மறுபிறவியை நான் நம்புகிறேன்.
அனால் இவையெல்லாம் வெறும் நம்பிக்கையே. ஒரு விஷயத்தில் நம்பிக்கை கொள்வது வேறு, அதை அனுபவித்து உண்மை என உணர்வது வேறு. மறுபிறவி, சொர்க்கம், நரகம் போன்றவை உள்ளதா என்று எவ்வளவுதான் விவாதித்தாலும், இறந்த பிறகு அனுபவித்து உணர்ந்த பிறகு தான் உண்மை என்றோ, உண்மை இல்லை என்றோ வலியுறுத்திக் கூற முடியும். இறந்த பிறகு இதை அனுபவிக்க முதலில் ‘நான்’ இருப்பேனா என்பதே கேள்விக்குறி தான்.
அதுவரை, நாம் வாழும் இந்த வாழ்க்கையிலேயே நம் கண்ணோட்டத்தின் மூலம் சொர்க்கத்தை உருவாக்கிக் கொள்ளலாமே. பிரபஞ்ச விளையாட்டை ஆனந்தமாக, ஒரு spirit of adventureஉடன் விளையாடினால் இந்த வாழ்க்கையே சுவர்க்கம் தான். வாழ்க்கையை போராட்டமாக நினைத்து பயத்திலும் புலம்பலிலும் காலத்தை கழித்தால் அதைவிட நரகம் வேறென்ன இருக்க முடியும்.
வாழ்க்கையை ஆனந்தமாக விளையாடுங்கள்.
அமைதி நிலவட்டும். அன்பு மலரட்டும்.
(தமிழ்மணம் விவாதக்களத்தில் இது பற்றிய என் கருத்துக்களை பார்க்கவும்)
2 comments ஜூன் 13, 2007